சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் வெளியீட்டிற்கான விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், பான் இந்தியா திரைப்படங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமான இயக்குனர் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
“ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு மட்டுமே தொடர்புடைய தெலுங்கு சினிமாவை உலகளவில் கொண்டு செல்ல சூர்யா முக்கிய காரணமாக உள்ளார். ‘கஜினி’ படம் வெளிவந்தபோது சூர்யா இங்கு வந்து படத்தின் புரமோஷனை செய்தார். இதைப் பார்த்த பிறகு, தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சூர்யா செய்ததைப்போல் அவர்களும் மற்ற மொழிகளில் செயல்பட வேண்டும் என நான் ஆலோசனை கூறினேன். சூர்யா, நீங்கதான் ‘பாகுபலி’ போன்ற பான் இந்தியா படத்திற்கு ஊக்கமளித்தீர்கள்,” என்று கூறினார் ராஜமௌலி. அந்த நேரத்தில், மேடையின் முன்புறம் அமர்ந்திருந்த சூர்யா எழுந்து, ராஜமௌலியை கட்டிப்பிடித்து தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், அவர் தொடர்ந்து, “சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என இருந்தது. ஆனால், அது சாத்தியமாகவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. ‘கங்குவா’ போன்ற படத்தை பல்வேறு இடங்களில் படமாக்கி உள்ளார்கள். இது சாதாரண விஷயமல்ல. மேக்கிங் வீடியோ பார்த்தபோது அதன் கடினத்தன்மை புரிந்தது. இயக்குனர் சிவா மற்றும் ‘கங்குவா’ குழுவினருக்குப் பாராட்டுகள். இப்படங்களை தியேட்டரில் பார்க்கும்போது மட்டுமே அதன் முழு அனுபவத்தை உணர முடியும்,” என்று கூறினார்.