கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார். தமிழில் ரஜினிகாந்தின் “ஜெயிலர்”, தனுஷின் “கேப்டன் மில்லர்” போன்ற படங்களில் நடித்தவர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாடு திரும்பினார்.

அதன் பின்னர், திரைத்துறையில் மீண்டும் செயல்படத் தயாராகி வருகிறார். குறிப்பாக, “கேம் சேஞ்சர்” படத்தை தொடர்ந்து, ராம்சரண் நடிக்கும் 16வது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். தனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடிக்கும் முன்பே அவர் இந்த படத்திற்காக ஒப்பந்தமாகி இருந்தார்.
இந்நிலையில், வரும் மார்ச் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்கும் ராம்சரண் 16வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிவராஜ் குமார் கலந்து கொள்கிறார். பான்-இந்தியா படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் ஜெகபதி பாபு மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.