இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 4ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘3BHK’. இதில் சரத்குமார் தேவயானி, மிதார குனாத், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளராக பாம்பே ஜெயஸ்ரீ மகன் அம்ரீத் ராம்நாத் பணியாற்றியிருந்தார். படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் வெற்றியொட்டி நடைபெற்ற நன்றி விழா சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. அந்த விழாவில் நடிகர் சரத்குமார் உட்பட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
அவ்விழாவில் பேசிய சரத்குமார், ‘3BHK’ திரைப்படம் பார்வையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அம்ரீத் ராம்நாத், காட்சிகளுக்கு ஏற்ப உகந்த இசையை அழகாக அமைத்துள்ளார். அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “உங்கள் கைகடிகாரம் ரொம்ப அழகாக இருக்கிறது” எனச் சொன்னார். இதனைத் தொடர்ந்து, “இந்தக் கடிகாரத்தை அவருக்குப் பரிசளிக்கிறேன்” என்று கூறிய சரத்குமார், தன்னுடைய கையில் இருந்த விலை உயர்ந்த வாட்சை அம்ரீத் ராம்நாத்க்கு பரிசாக வழங்கினார்.