இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போபால் மாகாணத்தின் கடைசி மன்னராக நவாப் ஹமிதுல்லாகான் இருந்தார். அவருக்கு 3 மகள்கள் இருந்தனர். அதில் மூத்த மகள் அபிதா சுல்தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது 1950ல் பாகிஸ்தான் சென்றுவிட்டார். 2-வது மகள் சஜிதா சுல்தான் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். இவர் நவாப் இப்திகார் அலிகான் பட்டோடியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் பேரன்தான் பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலிகான்.
புதுக்கோட்டை மன்னர் குடும்பம் போன்று, சென்னை ஆற்காட்டு நவாப் குடும்பம் போன்று ஹமிதுல்லாகான் குடும்பத்துக்கு மத்திய பிரதேசத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இவற்றின் இப்போதைய மதிப்பு 15 ஆயிரம் கோடி என சொல்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விட்டவர்களின் சொத்துகள் இந்திய அரசுக்கு சொந்தம் என சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி நவாப் ஹமிதுல்லாகானின் அனைத்து சொத்துகளும் மத்திய அரசுக்கு சொந்தம் என மும்பையை தலைமையகமாக கொண்ட எதிரி சொத்து காப்பக அலுவலகம் கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தது. இதை எதிர்த்து சைப் அலிகான், குடும்பத்தினர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, சொத்துகளை மத்திய அரசு கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று விட்டவர்களின் சொத்துகளுக்கு வாரிசுரிமை கிடையாது என்று மத்திய அரசு புதிய சட்டம் இயற்றியது. இதனால் இடைக்கால தடையை விலக்கிக் கொள்வதாக கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி மத்திய பிரதேச உயர் நீதிமன்ற அறிவித்தது. அதேநேரம் 30 நாட்களுக்குள் சைப் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது.இந்த காலக் கெடுவுக்குள் சைப் அலிகான் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் 15 ஆயிரம் கோடி சொத்துகளும் மத்திய அரசிற்கு செய்கிறதாம்.