ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் ‘லோகா’, ‘ஓடு குதிரா சாடும் குதிரா’, ‘ஹிருதயபூர்வம்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதலே ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கிய நிலையில் கேரளாவிலும் தமிழகத்திலும் மக்கள் உற்சாகமாக இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர். ஓணத்தின் முக்கியமான நாளான திருவோணம் நாளை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படங்களில் ‘லோகா’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது மட்டுமின்றி 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இச்சமயத்தில் நேற்று கேரள சுற்றுலாத்துறை சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்வை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நடிகர் ரவி மோகனும், பசில் ஜோசப்பும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.