பிரபலங்களின் உருவத்தை அச்சு அசலாக மெழுகுசிலைகளாக உருவாக்கி, லண்டனில் அமைந்துள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்களின் சிலைகளும் அந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ராம்சரண் அவர்களின் மெழுகுச் சிலையும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு, லண்டனில் அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ராம்சரண் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

இதில் வித்தியாசமாக இருந்த விஷயம் என்னவென்றால், பொதுவாக இத்தகைய சிலைகளுக்காக நடிகர்கள் தனியாகவே போஸ் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் ராம்சரண் மட்டும் தான் மிகவும் நேசமாக வளர்க்கும் ‘ரைம்’ என்ற நாய்க்குட்டியை மடியில் அமர்த்தியபடி போஸ் கொடுத்திருந்தார். அதேபோல் அவருடைய மெழுகுசிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு விழாவின்போது, ராம்சரண் சோபாவில் தனது நாய்க்குட்டியுடன் அமர்ந்திருக்கும் தனது மெழுகுசிலையின் அருகில், அதே போஸில் நிஜமாகவே அமர்ந்தார். மேலும், நிகழ்விற்கு வந்திருந்த தனது நாய்க்குட்டியையும் அருகில் அமர வைத்தார். இதன் காரணமாக இரண்டும் ஒரே மாதிரியான காட்சி அளித்தது. இந்த காட்சி மிகவும் அழகாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்தது. இதை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுவருகிறது.