கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் “ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஹே” எனும் திரைப்படம் வெளியானது. இளம் கணவனான திமிர்காரர் தனது மனைவியை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பது மற்றும் மனைவி அதற்கு எப்படியெல்லாம் தகுந்த பாடம் புகட்டுகிறார் என்பது காமெடியாக இப்படத்தில் சொல்லப்பட்டது. இதனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை விபின் தாஸ் என்பவர் இயக்கினார். அதன்பின்னர், பிரித்விராஜ், இயக்குனர் பஷில் ஜோசப் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில் “குருவாயூர் அம்பல நடையில்” என்ற படத்தை இயக்கினார்.

அந்த படமும் கடந்த மே மாதத்தில் வெளியானது, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், விபின் தாஸ், தனது அடுத்த திரைப்படத்திற்காக மீண்டும் பிரித்விராஜுடன் இணைந்துள்ளார்.

அவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு “சந்தோஷ் டிராபி” என பெயரிடப்பட்டுள்ளது. விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு, பிரித்விராஜின் பிறந்த நாளான நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.