நகைச்சுவை நடிகர்களும் கதை நாயகர்களாக உயர்ந்து வருகிறார்கள். காளி வெங்கட், அப்புகுட்டி, ரோபோ சங்கர் ஆகியோரின் தொடர்ச்சியாக முனீஷ்காந்தும் ஹீரோவாகிறார்.

ராமதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், முண்டாசுப்பட்டி படத்தில் சினிமா வாய்ப்புக்காக தனது பெயரை முனீஷ்காந்த் என்று மாற்றிக் கொள்ளும் பாத்திரத்தில் நடித்தார். அந்த படம் மற்றும் அவரது நடிப்பு நல்ல வரவேற்பு பெற்றதால் தனது பெயரையே முனீஷ்காந்த் என நிரந்தரமாக மாற்றிக் கொண்டார். சூது கவ்வும், ஜிகர்தண்டா, டார்லிங் 2, மாநகரம், டிடி ரிட்டர்ன்ஸ், கேங்கர்ஸ் போன்ற பல்வேறு படங்களைத் தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது அவரே கதை நாயகனாகி உள்ளார்.
முனீஷ்காந்துடன் ருத்ரன் பிரவீன், ஷாதிகா, மவுரிஷ் தாஸ், அஷ்வின், நாகராஜ் உள்ளிட்டோரும் நடிக்கும் இப்படத்தை லோகேஷ் குமார் இயக்குகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படம் ஒரு ‘டார்க் காமெடி’ ஆகும். “எளிமையான மக்களுக்கு எளிதில் கிடைக்கும் கந்து வட்டி எவ்வாறு அவர்களின் வாழ்க்கையை சிக்கலில் ஆழ்த்துகிறது என்பதே கதைக்களம். சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் படமாக உருவாக்கி வருகிறோம். படத்தின் தலைப்பு மற்றும் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.