நடிகர் மாதவன் தனது படப்பிடிப்புக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கின் ‘லே’ பகுதியில் சென்றிருந்தார். அங்கு தற்போது கடும் மழை பெய்து வருவதால் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. லே பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டு அருகிலிருப்பவர்களையே காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் தண்ணீரால் சூழப்பட்டதால், விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழையால், மாதவன் ஹோட்டல் அறைக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், லடாக் மலை உச்சியில் உள்ள லே பகுதியில் இருக்கிறோம். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் லே விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விரைவில் வீட்டிற்கு திரும்புவேன் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் லடாக்கிற்கு வரும்போது இதே நிலைதான் ஏற்படுகிறது.
கடைசியாக 2008-ல் 3 இடியட்ஸ் படப்பிடிப்புக்காக இங்கு வந்தபோது, ஆகஸ்ட் மாதம் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இப்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லேயில் சிக்கியிருக்கிறோம். மழை காரணமாக விமான சேவை இல்லை. விரைவில் வானம் தெளிந்துவிடும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்கது, 3 இடியட்ஸ் படத்தின் முக்கியமான சில காட்சிகள் லடாக்கில்தான் படமாக்கப்பட்டன.