நடிகை கோவை சரளாவை ‘பாப்பா’ என்று நடிகர் கமல்ஹாசன் அழைத்த ருசிகர சம்பவம் இன்று நடந்துள்ளது.
சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் இன்று காலையில் நடைபெற்ற ‘செம்பி’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “கோவை சரளாவை எல்லோரும் ‘அக்கா’, ‘அம்மா’ என்று கூப்பிடுகிறார்கள். நான் எப்படி கூப்பிடுவது என்று தெரியவில்லை. சரளா பாப்பாவை எனக்கு நன்றாக தெரியும். இதில் நன்றாகவும் நடித்துள்ளார். எட்டு வயது பாப்பாவை போல அவர் தயக்கமில்லாமல் நடித்துள்ளார். பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது. நான் நடிப்பு வாய்ப்பு தேடிய காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள்.

“என்ன சார் கோவணத்தையெல்லாம் கட்டிக்கிட்டு..?” என சொன்னார்கள். ஆனால் இப்போது அதை கொண்டாடுகிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் பெரிய படமா சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில்தான் இருக்கிறது. இப்போது ‘16 வயதினிலே’ படத்தை பேசுகிறார்கள், அதுதான் பெரிய படம். “இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம்..?” எனக் கேட்டால் அது பெரிய படம் இல்லை..
இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். கொடைக்கானலில் மிக நல்ல லொகேஷன்களில் எடுத்திருக்கிறார் பிரபு சாலமன். அஷ்வின் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா அசால்ட்டாக நடித்திருக்கிறார். நான் ரசித்து பார்த்தேன். நாஞ்சில் சம்பத்தின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. கேமரா வொர்க் மிக அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்க தயங்குவதை தைரியமாக பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும். படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும்.
நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள். அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக் கொள்ள தயாராக இருங்கள்.
இது நல்ல படம். இது வெற்றிப் படம் என்பதை ரசிகர்களே முடிவு செய்வார்கள். இந்த ‘செம்பி’ மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.” என்று வாழ்த்தினார்.