Sunday, November 10, 2024

மறைந்தார் நடிகர் டெல்லி கணேஷ்… திரையுலகினர் இரங்கல்! #DELHI GANESH

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான டெல்லி கணேஷ் சென்னையில் தனது இல்லத்தில் நேற்றிரவு (நவ.,9) காலமானார். அவருக்கு வயது 80.

திருநெல்வேலியை சேர்ந்த டெல்லி கணேஷ், 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிறந்தார். 1976ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, விஜய், அஜித் மற்றும் இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் உட்பட பலர் உடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவரால் சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களிலும் நடிக்க முடிந்துள்ளது. குறிப்பாக, கமலின் திரைப்படங்களில் தவறாமல் இடம் பெற்ற இவரும் அவரது ஆஸ்தான நடிகரானார்.

டெல்லி கணேஷ், தமிழக அரசின் கலைமாமணி விருதை மற்றும் பசி படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதை பெற்றவர். வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும் தனது இயல்பான நடிப்பால் பிரபலமான டெல்லி கணேஷ், மக்களின் மனதில் நிலைத்த இடம் பிடித்தார். 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் பணியாற்றியவர்.

குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய டெல்லி கணேஷ், நடிப்புடன் சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் தன் பங்களிப்பை வழங்கினார். அவரது மறைவுக்கு திரையுலகினர் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

சென்னை ராமபுரம் இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷிற்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். அவரது மகன் மகா, ‛என்னுள் ஆயிரம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சக்ரா படத்தில் நடித்துள்ளார்.

திங்கள் அன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரின் மகன் மகா தெரிவித்தார். மகா செய்தியாளர்களிடம் கூறும்போது, “அப்பாவுக்கு 80 வயதாகிறது. சமீபத்தில் சதாபிஷேக விழாவை நடத்தினோம். அவர் நன்றாகவே இருந்தார். வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவால் அவ்வப்போது சிரமம் ஏற்பட்டது. நேற்று அக்கா உடன் பேசிக் கொண்டிருந்தார். இரவு மாத்திரை கொடுக்க அவரை எழுப்பச் சென்றோம். அப்போது அவர் அசைவின்றி இருந்தார். டாக்டர் பார்த்துவிட்டு அவர் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தார். இறுதிச்சடங்கு நாளை (நவ.,11) காலை 10 முதல் 11 மணிக்குள் நடைபெறும். உறவினர்களை வரவழைத்துள்ளோம்” என்றார்.

- Advertisement -

Read more

Local News