மலையாளத் திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களை அளித்து, மோஸ்ட் வான்டெட் நடிகராக உயர்ந்து வருகிறார் பாசில் ஜோசஃப். சமீபத்தில் அவர் நடித்த பொன்மேன், மரணமாஸ் ஆகிய இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றன. தமிழில் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார். நடிகர், இயக்குநர் என இரண்டிலும் வெற்றி கண்டிருக்கும் பாசில் ஜோசஃப், இனி தயாரிப்பாளராகவும் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அடுத்ததாக இயக்கப்போகும் படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில், தயாரிப்பு பக்கம் இறங்கியுள்ள தகவலை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். தனது நிறுவனத்திற்கு பாசில் ஜோசஃப் என்டர்டெயின்மென்ட் என்று பெயரிட்டுள்ளார்.
“இதுவரை நான் செய்யாத ஒன்றை முயற்சிக்கிறேன் – ஆம், இனி திரைப்படத் தயாரிப்பில் அடியெடுத்து வைக்கிறேன். கதைகளை இன்னும் சிறப்பாக, துணிச்சலுடன், புதிய வழிகளில் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பயணம் எங்கு கொண்டு செல்கிறது என்பதைப் பார்ப்போம். பேசில் ஜோசஃப் என்டர்டெயின்மென்ட்க்கு வரவேற்கிறோம்” என்று அவர் பதிவு செய்துள்ளார். மேலும், தனது மின்னல் முரளி படத்தை மையமாகக் கொண்ட அனிமேஷன் காணொளியை தயாரித்து, தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவையும் வெளியிட்டுள்ளார்.