இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா கோவாவின் பான்ஜியில் நேற்று துவங்கியது. இந்த விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு துறையின் இணை அமைச்சர் எல். முருகன் அதிகாரப்பூர்வமாக துவக்கிவைத்தார். வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் சிவகார்த்திகேயனின் அமரன், அப்புக்குட்டி இயக்கிய பிறந்தநாள் வாழ்த்துகள், மேலும் இ.வி. கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ஆநிரை என்ற குறும்படமும் இடம்பெறுகின்றன.

நேற்று நடைபெற்ற துவக்க விழாவில், கொரிய குடியரசின் தேசிய அவை உறுப்பினர் ஜேவோன் கிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் ஜாஜு, கூடுதல் செயலாளர் பிரபாத், விழா இயக்குனரும் தயாரிப்பாளருமான சேகர் கபூர், நடிகர் அனுபம் கெர், வேவ்ஸ் பஜாரின் ஆலோசகர் ஜெரோம் பைலார்ட், ஆஸ்திரேலிய திரைப்பட இயக்குனர் கார்த் டேவிஸ், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் பிரகாஷ் மக்தூம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு சிறப்பு கவுரவம் வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த துவக்க விழாவில் பாலகிருஷ்ணாவுக்கு அந்த கவுரவம் வழங்கப்பட்டது. ரஜினிகாந்திற்கு விழா நிறைவுநாளில் கவுரவம் வழங்கப்பட உள்ளது.அத்துடன் மறைந்த இயக்குனர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா, சலீல் சவுத்ரி ஆகியோரின் நூற்றாண்டு விழாவும் இவ்விழாவில் கொண்டாடப்படுகிறது.

