தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ரேஸர் ஆகவும் பரிசுகளை வென்று வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தய போட்டியில் அவர் பங்கேற்ற அணி 3-வது இடத்தைப் பெற்று ரசிகர்களை அசத்தியது. அதே நேரத்தில் கலைத்துறையில் அவர் வழங்கி வரும் சிறப்பான பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை அறிவித்தது. இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்திலும் அஜித் பங்கேற்ற ரேசிங் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து புகழை பெற்றது.
அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஜிவி பிரகாஷ். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகிய ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது என்று ரோமியோ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அஜித் குமார் தனது அடுத்த கார் பந்தயத்திற்கான தயாரிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிற அவரின் வீடியோவை, அவரது நிறுவனமான AK நிறுவனத்தினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.