90களில் இளைஞர்களின் மனதை மயக்க செய்த கனவுக் கன்னியாக விளங்கியவர் நடிகை குஷ்பு. ரசிகர்கள் குஷ்புக்காக கோவில் கட்டும் அளவுக்கு பிரபலமானவர். தற்போது ஒரு பக்கம் திரைப்பட தயாரிப்பு, மறுபக்கம் அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் குஷ்பு, தன் தயாரிப்பில் உருவாகும் படங்களில் ஒரு காட்சி அல்லது பாடலில் தோன்றுவதோடு மட்டுமல்லாமல், நட்புக்காக சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அவ்வாறு விஜய்யுடன் நடித்த வாரிசு திரைப்படத்தில் அவரது காட்சிகள் படத்தில் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அதேபோல், அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு குறுகிய காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கினார்.
சமீபத்தில் குஷ்பு அளித்த ஒரு பேட்டியில், அண்ணாத்த படத்தில் நடித்ததைப் பற்றி பேசும்போது, “அண்ணாத்த படத்தில் நடிப்பது எனக்கே ஏமாற்றமாக இருக்கிறது. நான் படத்தில் ஒப்பந்தமாகிய போது, ரஜினிக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன் என்று எண்ணப்பட்டது. அப்போது நயன்தாராவின் கதாபாத்திரம் அமையவே இல்லை. பின்னர் படத்தின் கதை ரஜினி திருமணம் ஆகாதவர் என்ற கோணத்தில் நகர்ந்தது. ஆனால் பின்னர் நயன்தாராவின் கதாபாத்திரம் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. நான் நடித்த காட்சிகள் படப்பிடிப்பின் போது நன்றாக இருந்தன. ஆனால் டப்பிங் பேசும்போது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.