ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் ருக்மினி நடித்துள்ள திரைப்படம் ‘ஏஸ்’. இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி பேசியதாவது: “வர்ணம் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு இந்த இயக்குநரின் உதவியே காரணம். என்னால் என்ன செய்ய முடியும் என என் அப்பா உடல்நலம் சரியில்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அந்த படத்தின் ஸ்டிலை அவருக்கு காட்டினேன். இடையில் ‘பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் நடிக்கவும் இவரின் முயற்சியால் தான் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் எனக்கு அளித்த ஆதரவை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். ‘ஏஸ்’ திரைப்படம் பெரும்பாலான பகுதிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

இந்த படத்தில் யோகிபாபு இரண்டாவது ஹீரோவாக நடித்துள்ளார். அவர் என்னிடம் அடிக்கடி கதைகளை சொல்கிறார். அவரும் விரைவில் ஒரு இயக்குநராக மாறவேண்டும். அவரைப் பற்றிய நெகட்டிவ் செய்திகள் பரவுவது தவறானது. அதேபோல், இயக்குநர் மிஷ்கின் மிகவும் கடுமையாக உழைக்கும் ஒருவர். அவர் புத்தகங்களால் சூழப்பட்டு உறங்கும் அளவுக்கு படிப்பதில் ஈடுபாடுடையவர். மேடைகளில் பேசும்போது மற்ற நல்ல படங்கள் வெற்றி பெறவேண்டும் என்பதையும் கூறுகிறார். எனது ‘கடைசி விவசாயி’ படத்தையும் அவர் நேரில் பாராட்டினார்.
‘மகாராஜா’, ‘விடுதலை 2’ படங்களைத் தொடர்ந்து ‘ஏஸ்’ வெளியாகிறது. இதுவும் ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். சிலரை பார்த்தாலே எனக்கு பிடிக்கும். சிலரை பார்த்தால் பிடிக்கவே பிடிக்காது. ஏன் என்று எனக்கே தெரியவில்லை. ஒருவேளை யாராவது என்னை சுயநலத்துக்காக பயன்படுத்தினாலும், அவர்கள் என்னை இன்னும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றே நான் சொல்வேன் என விஜய்சேதுபதி கூறியுள்ளார்.