ஆமீர் கான் தயாரித்து நடித்தது சமீபத்தில் வெளியானதும் வெற்றி பெற்ற ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம், நேரடியாக யூடியூப் தளத்தில் வெளியிடப்படுகிறது. ஒரு பாலிவுட் திரைப்படம் நேரடியாக யூடியூப்பில் வெளியிடப்படுவது இதுவே முதன்மையான முறையாகும். ஆமீர்கான், ஜெனிலியா தேஷ்முக் மற்றும் 10 மாற்றுத் திறனாளிகளும் இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ₹100 கட்டணம் செலுத்தி பார்க்கலாம். மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்களது நாட்டின் சந்தை நிலையைப் பொருத்து மாற்றிய கட்டணத்தில் பார்க்கலாம் என்றும், இந்தப் படம் வேறு எந்த தளத்திலும் கிடைக்காது என்றும் ஆமீர்கான் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ₹250 கோடி வசூல் செய்து சாதனை படைத்த இந்தப் படம் யூடியூபில் வெளியாகும் தகவலில் சிலர் அதிர்ச்சி அடைந்தாலும், இது சினிமா வியாபாரத்தின் அடுத்த கட்ட முன்னேற்றம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு இணைய இணைப்பு மட்டுமே போதுமானது. திரையரங்கில் தவறவிட்டோர்கள் அல்லது மறுபடியும் பார்க்க விரும்புபவர்கள் இதில் பலனடைவர் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆமீர்கான் கூறியதாவது : கடந்த 15 ஆண்டுகளாக, திரையரங்குகளுக்குள் செல்ல இயலாத மக்களை எவ்வாறு சென்றடைவது என்ற சவாலில் நான் போராடி வருகிறேன். இப்போது அதற்கான சரியான தருணம் வந்துவிட்டது. மின்னணுக் கட்டணங்களில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இணையப் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், பெரும்பாலான சாதனங்களில் யூடியூப் நிறுவப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் பரந்த மக்களையும், உலகின் முக்கியமான பகுதிகளையும் எளிதில் சென்றடைய முடியும்.
சினிமா எல்லா மக்களும் குறைந்த விலையில், நேரத்தில் கட்டுப்பாடின்றி பார்க்கும் வாய்ப்பு பெற வேண்டும் என்பதே என் கனவு. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் திரைப்படங்களைப் பார்க்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என விரும்புகிறேன். இந்த முயற்சி வெற்றிபெற்றால், புவியியல் தடைகளையும், மற்ற குறுக்கீடுகளையும் தாண்டி, பல்வேறு படைப்பாற்றல் மிக்க கதைகள் சொல்லக்கூடிய சூழல் உருவாகும். புதிய இயக்குநர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இதை நான் அனைவருக்குமான வெற்றியாகவே பார்ப்பதாக கூறினார்.