சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் குமார் மற்றும் முத்துக்கருப்பி தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தங்களது மகள்களின் காதணி விழாவிற்காக முத்துக்கருப்பி சிறு சிறு தொகையாக பணத்தை சேமித்து வந்தார். அந்த சேமிப்பை தகரத்திலான உண்டியலில் வைத்திருந்த அவர், அதை வீட்டிலேயே ஒரு குழி தோண்டி புதைத்து பாதுகாத்துவந்தார்.சில மாதங்களுக்கு முன், சேமிப்பு தொகை ரூ.1 லட்சம் ஆனது என்பதை கணக்கிட்டு பார்த்த முத்துக்கருப்பி, அதே உண்டியலை மீண்டும் புதைத்து வைத்திருந்தார். பின்னர் அந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, தகர உண்டியலுக்குள் கரையான்கள் புகுந்து உள்ளே வைத்திருந்த பண நாணயங்களை அரித்துவிட்டன.
இதை சில நாட்கள் முன்னர் தகர உண்டியலைத் திறந்தபோது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் முத்துக்கருப்பி.என்ன செய்யவேண்டும் என்ற குழப்பத்தில் தனது பிள்ளைகளுடன் அழுது புலம்பிய அவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும், அந்த கரையான் அரித்த நாணயங்களை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றக்கூடிய பரிந்துரைகளை எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், குமார் மற்றும் முத்துக்கருப்பி தம்பதியை தனது சென்னையிலுள்ள இல்லத்திற்கு அழைத்து, அவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இந்த காட்சியை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பணத்தை பெற்ற அந்த தம்பதி, கண்ணீருடன் ராகவா லாரன்ஸுக்கு நன்றியை தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி வைரலாகி, லாரன்ஸுக்கு பலர் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.