2024 ஏப்ரல் மாதத்தில் வெளியான ‘ஒரு நொடி’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கதாநாயகனாக தமன்குமார் நடித்திருந்தார். அவருடன் வேல ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மணிவர்மன் இயக்கிய இந்த கிரைம் திரில்லர் படத்துக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகள் கிடைத்தன.

இந்தப் படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இயக்குநர் மணிவர்மன் மற்றும் நடிகர் தமன்குமார் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். இந்த புதிய திரைப்படத்திற்கு ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் தமன்குமாருக்கு ஜோடியாக மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ‘அமோகம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரர் தழுவிய கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த படமும் ‘ஒரு நொடி’ போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெறும் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. போஸ்டரில் “விரைவில் திரைக்கு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.