சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் லண்டனில் விடுமுறைக்காகச் சென்றிருந்தபோது, ஒரு ரசிகர் அவரை பின் தொடர்ந்து வீடியோ எடுக்க முயற்சித்தார். அந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதில், அந்த ரசிகரின் செல்போனை அக்ஷய் குமார் பறித்துக் கொண்டதாகக் கூறப்பட்டதால், அவர்மீது சிலர் கடுமையான விமர்சனங்களும் முன்வைத்தனர். சிலர் அந்த ரசிகரின் செயல்தான் தவறு என்றும் கூறினர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட ரசிகர் தான் நேரில் என்ன நடந்தது என்பதை விளக்கவந்தார்.

அவர் கூறியதாவது: “நான் லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெருவில் ஒரு சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, அக்ஷய் குமார் போல ஒருவர் நடந்துவருவது கண்டு பின் அவர் தான் என உறுதி செய்ய, அவரைப் பின்தொடர்ந்தேன். பின்னர், அவரை முன்னால் சென்று வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் அவர் திடீரென என்னை நெருங்கி வந்து, அனுமதியின்றி படம் எடுக்கக்கூடாது எனக் கூறி என் கையைப் பிடித்தார்.
அதற்கு நான், மற்றொருவரின் அனுமதியின்றி கையை தொடுவதும் தவறு என பதிலளித்தேன். அதற்குப் பதிலாக அவர், ‘நான் தொட்டது நண்பனாகவேதான்… இப்போது மிகவும் பிஸியாக இருக்கிறேன், தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள்… படம் எடுக்க வேண்டாம்…’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் அவர் என் செல்போனை பறிக்கவோ, அல்லது என்னிடம் சண்டையிடவில்லை. சிறிது நேரத்தில் அவர் மீண்டும் திரும்பி வந்து, என்னுடன் செல்பி எடுக்க போஸ் கொடுத்துவிட்டு சென்றார் என்று அந்த ரசிகர் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.