விதார்த் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாந்தர்’ படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்துள்ளார்.

கிரைம் திரில்லர் வகையிலான இந்த படத்தை எம் சினிமா புரொடக்ஷன் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு இணைந்து தயாரித்துள்ளனர்.இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், இயக்குநர் சலீம் சினிமாவுக்கு வருவதற்கு முன் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார். அவரை நான் முதலில் ஆட்டோ ஓட்டுநராகவே சந்தித்தேன். அப்போதே அவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என அறிமுகமானார். அவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை நேர்மையாக செய்தார். அவரது நேர்மை குறித்து பல செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளன.

படத்தின் கதாநாயகன் விதார்த் பேசுகையில், ”கதாநாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.” லாந்தர் திரைப்படம் வரும் ஜூன் 21 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.


