தமிழில் வெங்காயம், பயாஸ் கோப் போன்ற படங்களை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். முற்றிலும் வித்தியாசமான மற்றும் புதிய கோணத்தில் இருக்கும் படங்களை உருவாக்குவது அவரின் நெறிமுறை. சமீபத்தில் அவரின் ‘ஒன் மேன்’ படத்தை ஆயிரம் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தினர்.
இந்தப் படத்தில் என்ன புதியது என கேட்டபோது சங்ககிரி ராஜ்குமார் கூறியதாவது: இந்த படத்தின் கதை ஏற்காடு முதல் தொடங்கி, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கா என பல்வேறு நாடுகளை தாண்டி செல்லும் விதமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடித்தது முதல் இயக்கியது வரை, தொழில்நுட்பக் கலைஞராக வேலை செய்தது வரை அனைத்தும் நான் ஒருவராகவே செய்துள்ளேன். தமிழ் சினிமாவிலும், ஏனைய மொழிகளின் வரலாற்றிலும் ஒருவர் இத்தனை பொறுப்புகளை தனியாக செய்தது இதுவரை இல்லை.
திரைக்கதை, வசனம், மேக்கப், உடை அலங்காரம், கிரேன் மற்றும் டாலி இயக்கம், ஒளிப்பதிவு, லைட்டிங், எடிட்டிங், டப்பிங், 3D மாடலிங், டெக்சரிங், அனிமேஷன், காம்போசிட்டிங், கலர் கரெக்ஷன் என ஒரு திரைப்படத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் யாருடைய உதவியும் இன்றி முழுவதும் நான் ஒருவராக செய்திருக்கிறேன். மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, வாட்டிகன் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்.
நான் இதை ஒருவராக செய்ததை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பின் தொடக்கம் முதல் முடிவு வரை வேறு ஒரு கேமராவில் முழுக்க பதிவு செய்துவைத்துள்ளேன். இதில் நான் ஐந்து கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இந்த படம் ஆறு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. டிசம்பரில் இந்த படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம் என்றுள்ளார் சங்ககிரி ராஜ்குமார்.

