‘ராஞ்சானா’ படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் தனுஷ் அறிமுகமானார். அதன் பிறகு ‘அட்ராங்கி ரே’, ‘ஷமிதாப்’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது ‘தேரே இஷ்க் மெயின்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கீர்த்தி சனோன் கூறியதாவது: நான் இந்த படத்தில் ‘முக்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கேரக்டர். முக்தியின் வாழ்க்கை எங்கே தொடங்குகிறது, அவள் எப்படி முன்னேறுகிறாள், அவள் என்ன தேர்வு செய்கிறாள் போன்ற பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கேரக்டர் இது. முக்தி எதைத் தேர்வு செய்கிறாள், அவள் எப்படிப் முடிவு செய்கிறாள் என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. அவள் ஏன் அப்படிச் செய்கிறாள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது, ஆனால் அந்த உணர்வுகள் எல்லாம் வார்த்தைகளில் சொல்லப்படுவதில்லை. பார்ப்பவர்களே தங்களின் பார்வையில் அதை உணர்ந்து மொழிபெயர்க்கும் விதமாக இருக்கும்.
இந்த படத்தில் முன் கிளைமாக்ஸ் மற்றும் கடைசி கிளைமாக்ஸ் என்று இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க ஆறு நாட்கள் எடுத்தது. அந்த காட்சிகள் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மிகுந்த சோர்வை ஏற்படுத்தியது. ஒருசேர அனைவரும் சற்றே தளர்ச்சியடைந்ததை படப்பிடிப்பு தளத்தில் உணர முடிந்தது. அந்த நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பியபோதும், அந்த காட்சிகள் தொடர்ந்து என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. என்கிறார் கீர்த்தி சனோன்.

