‘டாக்டர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலும், ‘கோமதி அக்கா’ என்ற காமெடி வேடத்தின் மூலம் தனக்கான இடத்தை பிடித்த கராத்தே கார்த்தி, சமீபத்திய பேட்டியில் தனது திரைப்பயணத்தை பகிர்ந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த அவர் சிறுவயது முதல் ரஜினியின் தீவிர ரசிகர்; ‘பாயும் பலி’ படத்தை பார்த்தது முதல் உடற்பயிற்சி, தற்காப்புக் கலையில் ஆர்வம் அதிகரித்து தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். 2000ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸில் சேர்ந்த அவர், பணியில் இருந்தபோதே 13 முறை தேசிய அளவிலான கராத்தே பட்டத்தை வென்றதுடன், 2003ல் அகில இந்திய போலீஸ் குத்துச்சண்டை போட்டியில் சிறந்த வீரர் விருதையும் பெற்றார். பாக்சிங் போட்டிகளிலும் பல வெற்றிகளை பெற்ற அவர், 2006ல் எஸ்.ஐ பதவி உயர்வு கிடைக்கும் தருவாயில் சினிமா மீது இருந்த ஈர்ப்பால் பணியை விட்டு விலகினார்.

குடும்பத்தின் முழு ஆதரவுடன் திரைப்பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சி செய்த அவர், முதல் வாய்ப்பாக ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார். அதன் பின்னர் என்னை அறிந்தால், கைதி, தீரன் அதிகாரம் ஒன்று, சித்திரை செவ்வானம், பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் தேடி பெற்ற வாய்ப்புகளில் இருந்தாலும், முதன்முதலில் இவரைத் தேடி வந்த வாய்ப்பு ‘டாக்டர்’. வில்லனாக நினைத்து நடித்த இந்த படத்தில், காமெடி கலந்த ‘கோமதி அக்கா’ பாத்திரம் திரையரங்கில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது தான் அவருக்கும் ஆச்சரியம் என்கிறார்.
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்தி, அவருடன் பேட்ட, ஜெயிலர், கூலி போன்ற படங்களில் நடித்தது வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என்கிறார். ‘கூலி’ படத்தில் ரஜினி அவரை ‘பேட்பெல்லோ’ என குறிப்பிட்ட வசனம் தான், அவரை திரையுலகில் தனித்துவமாக அடையாளப்படுத்திய தருணம். சண்டை கலைஞராக வேண்டும் என்ற ஆசை இருந்தும் வயது காரணமாக அசோசியேஷன் மறுத்ததால் அது நிஜமாகவில்லை என்றாலும், முன்னணி இயக்குனர்களுடன் பணிபுரிந்ததன் மூலம் சினிமா மற்றும் நகைச்சுவை குறித்த பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டதாக கூறுகிறார். ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி வில்லன்களின் போன்று வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். தெலுங்கு, கன்னடம் உட்பட பிற மொழி படங்களிலிருந்து தற்போது வாய்ப்புகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிற மொழி படங்களில் காட்சிகளை முன்கூட்டியே தெளிவாக விளக்குவதால் வேலை மிகவும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் அமைவதாக அவர் கூறுகிறார். கடின உழைப்பை விட்டுவிடாமல் பொறுமையாக இருந்தால் வெற்றி கண்டிப்பாக வந்து சேரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

