ஜே.கே. சந்துரு இயக்கத்தில் கதைநாயகி ஆக கீர்த்திசுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம், நவம்பர் 28ல் ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து கீர்த்திசுரேஷ் பேசுகையில், ”என் திருமணத்துக்குபின் இந்த படம் வருகிறது. என் கணவர் இந்த படத்தை பார்த்துவிட்டார். இனி, இப்படி தனியாக பார்க்க வேண்டாம். தியேட்டரில் பார்க்கிறேன் என்கிறார். அவருடன் நடிக்கிற ஐடியா இல்லை. அவர் சினிமா என்றால் தெறித்து ஓடிவிடுவார். இந்த படத்தில் ஒரு குடும்பத்தில் இருக்கிற பெண்ணுக்கு என்ன பிரச்னை வருகிறது. அவள் ஏன் துப்பாக்கி எடுக்கிறார் என்ற ரீதியில் கதை செல்கிறது.

நடிகை ராதிகா, சூப்பர் சுப்பராயன் மாஸ்டருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதற்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்துக்கும் சம்பந்தம் இல்லை. அதன் அடுத்த பாகமும் இது இல்லை. ஆரம்பத்தில் என் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல், கேலிகள் வந்தன. ‘தொடரி’ படத்தை அவ்வளவு கிண்டல் செய்தார்கள். ஆனால், தொடரி படத்தை பார்த்துவிட்டுதான் ‘மகாநடி’ படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார் அந்த இயக்குனர். அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.
எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்வேன். இன்னமும் மகாநடி படத்தின் தாக்கம் இருக்கிறது. சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகமாகிவிட்டன. அவர்களிடம் வாழு, வாழுவிடுங்கள் என்றுதான் கேட்கிறேன் என்றுள்ளார்.

