பாலிவுட் நடிகை மஹிமா செளதரி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று தற்போது முழுமையாக மீண்டுள்ளார். சமீபத்தில், புற்றுநோயிலிருந்து மீண்ட இளம் பெண்களுக்கான ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், தன்னை எப்படி புற்றுநோயிலிருந்து மீட்டுக்கொண்டார் என்பது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

மாநாட்டில் பேசுகையில் அவர் கூறியது: எனக்கு மார்பகப் புற்றுநோய்க்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதற்கான பரிசோதனைக்காக நான் ஒருபோதும் செல்லவில்லை. வழக்கமாக வருடந்தோறும் செய்வது போல மருத்துவச் சோதனைக்கு சென்று இருந்தேன். அதுவே ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிய உதவியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது. சிகிச்சை எடுத்தேன். ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சை துறையில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல ஜெனரிக் மருந்துகள் தற்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன. மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அதிலிருந்து மீண்டவர்களின் அனுபவங்களை கேட்பது எனக்கு ஒரு பெரிய ஆதரவு,
என்று அவர் உணர்ச்சியோடு தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு மஹிமா செளதரிக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. சிகிச்சை காலத்தில் தலையை மொட்டை போட்டுக்கொண்ட தனது புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில், சிகிச்சையின் போது தலையை மொட்டை போட்டுக்கொள்ளும்படி எனக்கு நடிகர் அனுபம் கெர்தான் ஊக்கமளித்தார். மொட்டையும் ஒரு அழகே. ஆனால் சிலர் விக் அணிய விரும்பலாம். அணியலாம். அது இயற்கையான தோற்றத்தை தரும். சமீபத்தில் என்னைச் சந்தித்த பலருக்கும் நான் விக் அணிந்திருப்பது கூட தெரியவில்லை, என்றும் கூறினார்.

