பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி ஈரானை 75–21 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா. அவர் அணியின் துணை கேப்டனாகவும், ‘கில்லி’யாக விளையாடி இந்தியாவிற்கு தங்கத்தைத் தேடி தந்தார்.

இந்த சிறப்பான சாதனையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதையடுத்து, பல அரசியல் கட்சியினரும் திரைப்பிரபலங்களும் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கண்ணகி நகரில் கார்த்திகாவின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவர் ரூ.1 லட்சம் காசோலை வழங்கியதுடன் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து பாராட்டினார். பின்னர் ஊடகங்களை சந்தித்த லோகேஷ், “கண்ணகி நகர் எனக்கு பரிச்சயமான பகுதி. ‘மாஸ்டர்’ படத்துக்கு இங்கிருந்தே பலரை நடிக்க வைத்தேன். கார்த்திகாவின் சாதனை எனக்கு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது,” என தெரிவித்துள்ளார்.

