கரூரில் த.வெக தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் அஜித் குமார் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி வைரலானது. அதில் அவர், கரூர் சம்பவத்துக்கு ஒரே நபர் காரணமில்லை.நாம் அனைவரும் காரணம் தான். ஒரு சமூகமாக, கூட்டத்தின் பெருமையை காட்டிக்கொள்வதில் நாம் அதிக ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கிரிக்கெட் போட்டிகளில் கூட பெரும் கூட்டம் வரும், ஆனால் அங்கு இப்படி சம்பவங்கள் நடைபெறுவதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இவ்வாறான அபாயம் ஏற்படுகிறது. முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்கள் ஊக்குவிக்கக் கூடாது என்றார்.

அஜித்தின் இந்த கருத்து பலரது கவனத்தையும் பெற்றது. சிலர் அவர் விஜய்க்கு ஆதரவாகப் பேசினார் என கூறினார்கள். மற்றொருபக்கம், அவர் விஜய்க்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார் என சிலர் கூறினர் இதனால் விவாதங்கள் கிளம்பின.
இந்நிலையில் இதுகுறித்து அஜித் விளக்கம் அளித்துள்ளார் . அதில், கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதற்கு முன் ஆந்திராவில் சினிமா தியேட்டரில், பெங்களூரு கிரிக்கெட் மைதானத்திலும், பல நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. பொதுவெளியில் நடக்கும் விதிமுறைகள் நான் உள்பட அனைவருக்கும் பொருந்தும். என் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. சிலர் ரசிகர்கள் மீது பழியை சுமத்துகிறார்கள். என் பேட்டியை விஜய்க்கு எதிராகக் கட்டமைக்க முயல்பவர்கள் அமைதியாக இருக்கட்டும். நான் எப்போதும் விஜய்க்கு நல்லதே நினைத்துள்ளேன், வாழ்த்தியே இருக்கிறேன். அனைவரும் தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

