பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் ஹிந்தி மட்டும் அல்லாமல், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த “சர்ச்: தி நைனா மர்டர் கேஸ்” என்ற வெப் தொடரில் அவரது நடிப்பு கவனம் பெற்றது. அந்த தொடரை முன்னிட்டு அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தி சினிமாவுக்கு இடையிலான வித்தியாசங்கள் பற்றியும் தனது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

அதில் ஷ்ரத்தா தாஸ் கூறியதாவது: “எனக்கு எந்த சினிமா பின்னணியோ அல்லது பெரிய அறிமுகமோ இல்லாமல் இந்த துறையில் நுழைந்தேன். ஆரம்பத்தில் நான் பாடகியாக வேண்டும் என்றே எண்ணம் கொண்டிருந்தேன். ஒரு இசை ஆல்பம் பணியின் போது, ஒருவர் என்னை நடிகையாக தேர்வு செய்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிரிழந்ததால் அந்த படம் நடைபெறவில்லை. பின்னர் நான் தேசிய நாடகப் பள்ளி (NSD)யில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றேன். அதன்பின் சுமார் 500 ஆடிஷன்களில் கலந்துகொண்டிருக்கிறேன்.
என் முதல் பெரிய ஹிந்தி படம் ‘லாகூர்’. அந்த படத்தை உருவாக்க நான்கு ஆண்டுகள் எடுத்தது. அந்த இடைவெளியில் நான் 13 முதல் 15 படங்களில் ஒப்பந்தம் ஆனேன். நடிகர் கோபிசந்துடன் நடித்த தெலுங்கு படம் ‘மொகுடு’ தான் எனக்கு திடீர் புகழை அளித்தது. அதன் பின்னர் தொடர்ந்து பிஸியாக நடித்துக்கொண்டே இருக்கிறேன்.
ஹிந்தி மற்றும் தென்னிந்திய சினிமாவுக்கு இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் “மக்கள் தொடர்பு” (PR) தான். தென்னிந்தியாவில் பணம் கொடுத்து பப்ளிசிட்டி செய்வது போன்ற முறைகள் அதிகமாக இல்லை. அவர்கள் தங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு படத்தில் கையெழுத்திட்டவுடன், படப்பிடிப்பு மற்றும் மற்ற பணிகள் மிக வேகமாக நடைபெறும். சில நேரங்களில் படக்குழுவை நேரில் சந்திக்காமலே போனில் ஒப்பந்தம் செய்யப்பட்டதுண்டு. ஆனால் ஹிந்தி சினிமாவில் ஒவ்வொன்றும் மெதுவாக தான் நடக்கும்; ரசிகர்கள் பார்வையில் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தென்னிந்தியாவில் ரசிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்களுக்கிடையில் ஒரு ஆழமான பிணைப்பு இருக்கும். ஒரு நடிகை ஒரே ஒரு அல்லது இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அவர்களை ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அவர்கள் நடித்த படங்களைப் பார்க்க பல மைல்கள் தாண்டி சென்று பார்ப்பார்கள். இவ்வாறான நம்பிக்கையும் விசுவாசமும் கிடைப்பது மிகவும் அரிது,” என்று ஷ்ரத்தா தாஸ் தெரிவித்தார்.

