பி.ஆர். டாக்கீஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜபாண்டியன், பாஸ்கரன், டேங்கி ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் தலைப்பிடப்படாத திரைப்படத்தில், புதிய முகம் சுரேஷ் ரவியுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இணை நாயகனாக நடித்துள்ளார்.

இதில் தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை கோபி ஜெகதீஸ்வரன் கவனிக்கிறார், இசையமைப்பை என்.ஆர். ரகுநந்தன் மேற்கொள்கிறார். கே. பாலய்யா இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தைப் பற்றி இயக்குநர் கே. பாலய்யா கூறியதாவது: “கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்த படம், குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த ஒரு பேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. நகர வாழ்க்கையின் வேகம், அதற்கெதிராக நிற்கும் கிராமத்து வாழ்க்கையின் சாந்தம் ஆகிய இரண்டையும் எதிரெதிராக காட்டும் விதத்தில் சமூக அக்கறை கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், தேனி மற்றும் சென்னை பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது முழுமையாக படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

