நடிகர் மம்முட்டி கடந்த ஏழு மாதங்களாக உடல் நலக்குறைவு மற்றும் சிகிச்சை காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். சமீபத்தில் தான் நடித்துவரும் பேட்ரியாட் திரைப்படத்தின் விசாகப்பட்டினம் மற்றும் லண்டன் பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு, சுமார் எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு கேரளாவிற்கு திரும்பியுள்ளார்.

நேற்று கேரள மாநில முதல்வருடன் இணைந்து நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டி, அங்கிருந்து நேராக திருவனந்தபுரத்தில் வசித்து வரும் மூத்த நடிகர் மதுவை சந்தித்து அவரிடமிருந்து ஆசி பெற்றார்.
1970 மற்றும் 1980களில் மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருந்தவர் நடிகர் மது. தமிழில் தர்மதுரை திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தந்தையாக நடித்தது இவரின் குறிப்பிடத்தக்க படைப்பாகும். தற்போது சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று திருவனந்தபுரத்தில் வசித்து வரும் அவரை சந்தித்த மம்முட்டி, “நீண்ட நாட்களுக்கு பிறகு என் சூப்பர் ஸ்டாரை சந்தித்தேன்” எனக் கூறி, மதுவுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

