மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதன் பின்னர் அவர் இயக்குநராக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீரோவாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதேபோல், மோகன்லாலின் மகள் விஸ்மயாவும் எதிர்பாராத முறையில் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமாகிறார். ‘2018’ என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவாகும் ‘தொடக்கம்’ என்ற படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கிறார்.

கடந்த ஜூலை மாதத்திலேயே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று இப்படத்தின் துவக்க விழா மற்றும் பூஜை நடைபெற்றது. அதில் நடிகர் மோகன்லால், அவரது மனைவி சுசித்ரா, மகன் பிரணவ் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தையும் மோகன்லாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இவ்விழாவில் பேசிய மோகன்லால், என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் எதிர்பாராத அதிசயங்களாகவே அமைந்தன. அதனால் தான் என் மகளுக்கு ‘விஸ்மயா’ என்று பெயர் வைத்தேன். நான் சினிமாவிற்கு வருவேன் என நினைக்கவில்லை, ஆனால் நடிகனானேன். அதேபோல் என் மகளும் நடிகையாக மாறுவார் என நினைக்கவில்லை, ஆனால் இன்று அவர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். நல்ல கருத்தம்சம் கொண்ட கதை கிடைத்ததால் இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன். சினிமாவில் என் வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வழிநடத்திய பலரும் காரணம். அதுபோல என் பிள்ளைகளுக்கும் நல்ல வழிகாட்டிகள் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.

