ரவி தேஜா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் ஜதாரா திரைப்படம், வரவிருக்கும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரபல எழுத்தாளர் பானு போகவரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு முழுக்க மாஸ் எண்டர்டெயின்மென்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் பிரமாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு வாக்குறுதியை அளித்தார். அவர் கூறியதாவது, “மாஸ் ஜதாரா திரைப்படத்தை பார்வையாளர்கள் விரும்பவில்லை என்றால், நான் இந்த சினிமா துறையை விட்டு விலகி விடுவேன்,” என தெரிவித்தார். இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சமீப காலங்களில் பல நடிகர்கள் தங்களது படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் இதுபோன்ற ஆச்சரியமான அல்லது உணர்ச்சி பூர்வமான கருத்துக்களை வெளியிடுவது வழக்கமாகியுள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார்.

