தமிழ் திரையுலகில் தற்போது பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. சுதா கொங்கரா, கிருத்திகா உதயநிதி, ஐஸ்வர்யா, காயத்ரி புஷ்கர், ஹலீதா ஷமீம், லட்சுமி ராமகிருஷ்ணன், சவுந்தர்யா ரஜினிகாந்த் போன்றோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். அந்த வரிசையில் தன் இடத்தைப் பிடித்துள்ளார் இயக்குநரும், தயாரிப்பாளருமான மேக்னா.

அவர் ‘மலேசியாவில் 999’, ‘ஹார்பர்’, ‘லக்கி நன்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். தற்போது பி.வி. காவியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கல்யாண மன்னன்’ படத்தில் நாயகியாக நடித்து, தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். இதில் மீனாட்சி, தீபிகா, சினேகா, ரன்விதா சென்னப்பா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதுகுறித்து மேக்னா கூறுகையில், “சினிமாவில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இயக்கம் மட்டுமல்லாமல், தயாரிப்பு, நடிப்பு, ஒளிப்பதிவு உள்ளிட்ட பல துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனக்கும் இயக்கத்துடன் நடிப்பில் ஆர்வம் இருந்தது. அந்த ஆசையை இந்த ‘கல்யாண மன்னன்’ படத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்டேன். இது முழுநீள நகைச்சுவை திரைப்படம். ஒரே மனிதன் 5 பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளும் சூழ்நிலையை நகைச்சுவையுடன் சொல்லும் கதை இது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். எதிர்காலத்தில் நடிப்பிலும் கவனம் செலுத்துவேன்,” என்றார்.

