இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ என்ற படத்தை இயக்கியும், அதில் நடித்தும் தேசிய விருதை வென்றார் நடிகர் மாதவன். தற்போது அவர், மோட்டார் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘ஜிடிஎன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார். இவர் முன்னதாக சுசிகணேசன் இயக்கிய ‘பைவ் ஸ்டார்’ படத்தில் நடித்தவர், மேலும் சமீபத்தில் வெளியான ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தையும் இயக்கியவர். ‘ராக்கெட்ரி’யை தயாரித்த அதே நிறுவனம் ‘ஜிடிஎன்’ திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகியுள்ளது. அதில், தலையில் முடி இல்லாத வழுக்கைத் தோற்றத்தில் மாதவன் அசத்தலான கெட்டப்பில் தோன்றுகிறார். இயக்குனர் கிருஷ்ணகுமார் இதுகுறித்து கூறுகையில், “ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்துக்கு மாதவன் மிகவும் பொருத்தமானவர். அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அதற்காக தினமும் இரண்டரை மணி நேரம் மேக்கப் போட்டார். இப்படத்தில் ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் முழுவதும் கோவையில் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் படம் வெளியாகும்,” என தெரிவித்துள்ளார்.

