விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகை பிரியாமணி, சமீபத்தில் தனது சம்பளத்தைப் பற்றிய கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவர் பேசியதில், “ஒரு பிரபலத்தின் மார்க்கெட் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு சம்பளம் கேட்பதும், அதற்கேற்றபடி பெறுவதும் தவறல்ல. தகுதியான சம்பளம் கிடைப்பது நியாயமான விஷயம்தான். எதிர்பார்த்த அளவிற்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் அது எனக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. என் மதிப்பு என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு உரிய அளவுக்கே சம்பளத்தை கேட்பேன், அதற்கு மேல் ஒருபோதும் கோரமாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த பிரியாமணி, ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர் மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தமிழ் மொழியுடன் சேர்த்து மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

