நடிகர் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய பங்குகளை வகித்துவரும் நிலையில், இப்போது பாடலாசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் எழுதிய “என் வானம் நீயே” என்ற இசை ஆல்பம், தாயின் அன்பு மற்றும் அதன் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு வழங்கும் அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பாக இந்த ஆல்பம் உருவாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது.
இதுகுறித்து ரவி மோகன் தெரிவித்தபோது, “முதல் முறையாக எழுதுவது எனது உள்ளத்தின் ஆழத்தைத் திறந்தது போல இருந்தது. ‘என் வானம் நீயே’ என் தாயிடமிருந்து நான் உணர்ந்த சிறிய அதிசயங்களின் பிரதிபலிப்பு. அன்றாட வாழ்வில் கவனிக்கப்படாத பாசமான தருணங்கள் எவ்வளவு அழகானவை என்பதைக் காட்டும் பாடல் இது. என் நன்றியையும் பாசத்தையும் மிக எளிய, உண்மையான சொற்களில் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதினேன். இது எல்லா தாய்மார்களுக்கும், குறிப்பாக என் தாய்க்கு, எனது இதயபூர்வமான வணக்கமாக அர்ப்பணிக்கப்படுகிறது,” என்றார்.