வீர தீர சூரன் படத்திற்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெற்றதாக கூட கூறப்பட்டது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்தார். ஆனால் அதன் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிக்க முடியாததால் அதுவும் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது ‛ஹாய்’ பட இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் மற்றும் எண்டர்டெய்னர் கதைக்களத்தில் உருவாகிறது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் அடைந்துள்ளது. இதன் மூலம் முதன்முறையாக விக்ரம் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பார். முன்னதாக, விக்ரம் நடித்த ‘மகான்’ படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது, பின்னர் சந்தோஷ் நாராயணன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.