துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், அந்த படத்தின் பிரீ-ரிலீஸ் விழாவில் பேசும்போது, “இந்த ‘பைசன்’ படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இப்படியொரு கதையை தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையோடு சொல்ல வேண்டும் என நினைத்தபோது, சகோதரர் மணத்தி கணேசனிடம் சென்று, ‘உங்கள் வாழ்க்கையை என் திரைமொழியில், அரசியல் பார்வையோடு சொல்ல விரும்புகிறேன்’ என்று கூறினேன்.

அவர் ‘நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்’ என்று ஒப்புக்கொண்டார். இப்படித்தான் ‘பைசன்’ உருவானது. நான் இயக்குநராக புகழும் பணமும் சம்பாதித்துவிட்டேன். ஆனால், என் மக்களுக்கு நான் என்ன செய்தேன் என்ற கேள்விக்குப் பதிலாக ‘பைசன்’ தான்.
என் உச்சமான உணர்வும், பெருமையும் ‘பைசன்’. இந்தப் படத்துக்குள் தென் மாவட்டங்களில் தங்கள் வாழ்க்கையை இழந்த நிறைய இளைஞர்களின் உண்மை கதைகள் உள்ளன. தென் தமிழ்நாட்டின் அரசியலை மையமாகக் கொண்ட படம்தான் ‘பைசன்’. இந்தப் படத்தின் வெற்றியை விட, இது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.