தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகநாத், 2000ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடித்த ‘பத்ரி’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் மகேஷ் பாபுவுடன் இயக்கிய ‘போக்கிரி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பிறகு ‘பிசினஸ்மேன்’, ‘டெம்பர்’, ‘லிகர்’, ‘டபுள் இஸ்மார்ட்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பூரி ஜெகநாத், தற்போது நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

தற்காலிகமாக ‘ஸ்லம்டாக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் விஜய் சேதுபதியுடன் தபு, சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில் சண்டைக் காட்சிகளும் முக்கியமான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.