பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு (வயது 88) வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவரின் இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது.

ஒளிப்பதிவாளர் கே.எஸ். பிரசாத்தின் உதவியாளராக பணியாற்றிய பாபு, எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி நடித்த பல படங்களிலும் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். சில படங்களில் பாபுவே ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரஜினிகாந்தின் 27 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதில் ‘பிரியா’, ‘முரட்டுக்காளை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘பாயும் புலி’, ‘கழுகு’, ‘போக்கிரி ராஜா’ போன்ற படங்கள் முக்கியமானவை. கமல்ஹாசனுடன் ‘சகலகலா வல்லவன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். 2001ஆம் ஆண்டு பிரபு நடித்த ‘தாலி காத்த காலி அம்மன்’ அவரின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.