ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸுடன் நடிக்க இருந்த ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் ‘கல்கி 2898 ஏடி’ படத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தீபிகா 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பேன் என நிபந்தனை விதித்ததாகவும், இதனால் குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் பரபரப்பு நிலவியது.

இரண்டு படங்களிலிருந்தும் நீக்கப்பட்ட விவகாரத்தை இதுவரை அமைதியாக இருந்த தீபிகா, சமீபத்திய பேட்டியில் இதற்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் யாருடைய பெயர்களையும் சொல்ல விரும்பவில்லை, இதை பெரிய விஷயமாகவும் ஆக்க விரும்பவில்லை. பல ஆண் நடிகர்கள் பல ஆண்டுகளாக தினமும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள், திங்கள் முதல் வெள்ளி வரை, வார இறுதிகளில் ஓய்வு எடுக்கிறார்கள் — இது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் ஒரு பெண் நடிகை அல்லது புதிய தாய்மார்கள் இதே 8 மணி நேரத்தில் வேலை செய்ய விரும்பினால் அது மட்டும் தலைப்புச் செய்தியாக மாறுகிறது.
என் தொழில் வாழ்க்கை முழுவதும் இப்படிப்பட்ட நிலைகளைக் கடந்து வந்திருக்கிறேன். சம்பளம் முதல் பல விஷயங்கள் வரை நான் அமைதியாக சமாளித்தேன். எனது போராட்டங்களைப் பற்றி பெரிதாக வெளிப்படுத்தியதில்லை; ஏனெனில் நான் வளர்ந்த விதம் அதற்காக இல்லை. எந்த சூழ்நிலையையும் அமைதியாகவும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வதில் நம்பிக்கை வைத்துள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.