ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் மனைவி, மகன், சிறிது நிலம் என நிம்மதியாக விவசாயம் செய்து வாழும் விதார்த்தின் வாழ்க்கையில், திடீரென ஒரு கடன் பிரச்சனை வெடிக்கிறது. மறைந்த தந்தை எடுத்ததாக கூறப்படும் கடனுக்காக, அவருடைய நிலத்தை தனியார் வங்கி ஏலம் விடுகிறது. “எங்கப்பா எந்த கடனும் வாங்கலை, இது மோசடி” என்று நீதிமன்றம் வரை சென்று போராடுகிறார் விதார்த். உண்மையில் நடந்தது என்ன? தன் உயிராகக் கருதிய நிலத்தை மீட்டாரா? என்பதே மருதம் படத்தின் மையக் கதை. வி.கஜேந்திரன் இயக்கியுள்ளார்.

விவசாயம், விவசாயிகள் பற்றிய பல கதைகள் தமிழ்ச் சினிமாவில் வந்திருந்தாலும், இது புதுமையான அணுகுமுறையோடு வந்திருக்கிறது. லோன் என்ற பெயரில் கிராமப்புற விவசாயிகள் எப்படித் திசைதிருப்பப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள், அதைப் பற்றிய விவரங்கள் மிக நுணுக்கமாக திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கின்றன. சரியான நடிகர்கள் தேர்வு, ராணிப்பேட்டை கிராமப்புறத்தின் இயல்பான வாழ்க்கை, அங்குள்ள பேச்சு வழக்கு இவை எல்லாமே மருதம் படத்தை நம்ப வைக்கின்றன.
விவசாயி கன்னியப்பனாக விதார்த் வாழ்ந்து விட்டாரே என்று சொல்லலாம். எங்கும் ஹீரோயிசம் அல்லது ஓவர் ஆக்டிங் இல்லை. குடும்ப பாசம், நிலத்தை இழந்த வலி, வங்கியில் ஏற்படும் அவமானம், நீதிமன்றத்தில் தானே வாதாடும் காட்சிகள் அனைத்திலும் விதார்த் சிறந்த நடிப்பு கொடுத்திருக்கிறார். கடைசியில் மகனை அரசு பள்ளியில் சேர்க்கும் காட்சி, நிலத்தை இழந்தபோது கதறும் காட்சி இரண்டும் கண்ணீரை வரவழைக்கின்றன.
மனைவியாக ரக்ஷனா, மகனாக நடித்த சிறுவன் இருவரும் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்தியவர்கள். பைனான்ஸ்காரராக அருள்தாஸ், வங்கி அதிகாரிகள், எதிர்மறை வக்கீல், நீதிபதி ஆகியோரின் நடிப்பும் நம்பகமானது. வில்லனாக வங்கி ஆபீசராக வரும் இயக்குநர் சரவண சுப்பையா குறைந்த வசனத்திலேயே தாக்கம் ஏற்படுத்துகிறார். நண்பராக மாறனின் நகைச்சுவை இடையிடையே சிரிப்பை தருகிறது.
பாடல்கள் சராசரியாக இருந்தாலும் பின்னணி இசையில் ரகுநந்தன் நல்ல பீல் கொடுத்திருக்கிறார். கேமராமேன் அருள் கே.சோமசுந்தரம் மலையாள படங்களுக்கு இணையாக இயற்கையோடு கலந்த கேமரா வேலை செய்திருக்கிறார்.
படத்தின் பெரிய பலம் புதிய காட்சிகளும் நிஜ வாழ்க்கை சம்பவங்களும் தான். இப்படிப் பட்ட மோசடிகள் உண்மையிலேயே நடக்குமா? எப்படி நடக்கின்றன? என்பதைக் காட்டும் விதம் பாராட்டத்தக்கது. தனியார் வங்கிகளில் விவசாயிகளின் நிலை, அதிகாரிகளின் அட்டகாசம், பாதிக்கப்படும் மக்களின் பரிதாபம் இவை அனைத்தையும் எளிமையாகவும், உணர்வோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர். மோசடி எப்படி நடந்தது என்பதை விதார்த்தும் வக்கீலாக வரும் தினந்தோறும் நாகராஜனும் கண்டுபிடிக்கும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யம். எளிய மக்களின் குரலாக நிறைய வசனங்கள் பேசப்படுகின்றன. கிராமத்தில் இன்னும் நல்ல மனசுக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதையும் படம் அழகாக நினைவூட்டுகிறது. ‘மருதம்’ உண்மையோடு நெருக்கமாக பேசும் விவசாயிகளின் குரல்.