டி.எஸ். கிளமெண்ட் சுரேஷ் தயாரிப்பில், ஜெயவேல் இயக்கத்தில் பூவையார், அஜய் அர்னால்ட், அர்ஜூன், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்ததாவது:

“ஒரு படத்தின் டிரெய்லரைப் பார்த்தவுடன் அதைத் திரையரங்கில் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்குள் உருவாக வேண்டும். ஆனால் சில படங்களின் டிரெய்லர்கள் அதற்கேற்றபடி இல்லை. இப்போது பல இயக்குநர்கள், ரசிகர்கள் வன்முறை படங்களையே விரும்புகிறார்கள் என நினைத்து, ‘கத்தி, ரத்தம், சத்தம்’ என்பதிலேயே நம்பிக்கை வைத்து படங்களை எடுத்து வருகின்றனர். ஆனால் எங்கள் காலத்தில் பொழுதுபோக்கு படங்கள்தான் அதிகம் எடுக்கப்பட்டன. அதற்குள் ஒரு நல்ல செய்தி, ஒரு சமூக உணர்வு சேர்க்கப்பட்டிருக்கும்.
இன்றைய இளைஞர்கள் சினிமாவை வாழ்க்கையாக எடுத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் பள்ளி மாணவர்கள்கூட கத்தி பிடித்து அலைகிறார்கள். வருங்கால சமுதாயம் நல்ல பாதையில் செல்வதற்காக, இயக்குநர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து, சினிமாவை நல்ல விதமாக பயன்படுத்தி, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்,” எனக் கூறினார்