சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘டீசல்’. இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பேசியபோது, டீசல் என்ற தலைப்பு இருந்தாலும் இது உண்மையில் குரூடு ஆயில் அரசியல் மற்றும் அதன் பின்னணியில் நிகழும் குற்றச்செயல்களைப் பற்றிய கதை.

ஒருகாலத்தில் வடசென்னையில் கப்பல்கள் மற்றும் டேங்குகளில் இருந்து பைப் மூலமாக குரூடு ஆயில் எடுத்து வரப்பட்டு திருடப்பட்டு, மறைமுகமாக விற்கப்பட்ட காலத்தை படம் பதிவு செய்கிறது. நான் இதில் வடசென்னையைச் சேர்ந்த மீனவனாக நடித்திருக்கிறேன். இந்த பிரச்சினையால் எவ்வாறு வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது, அதை எதிர்த்து நான் என்ன செய்கிறேன் என்பதே கதையின் மையம். வினய், விவேக் பிரசன்னா உள்ளிட்ட நால்வர் வில்லன்களாக நடித்துள்ளனர். இது எனது முதல் ஆக்ஷன் படம்.
மீனவனாக நடித்தபோது என் தோல் நிறத்தையும், உடையூயும் நிஜத்தன்மையுடன் காட்ட இயக்குனர் சிறப்பாக கவனம் எடுத்தார். ராயபுரம், காசிமேடு, பழவந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. குரூடு ஆயில் பைப் லைன் தற்போது இல்லாததால் பெரிய செட் அமைத்து படமாக்கினோம். மீன்பிடி, லான்ச் ஓட்டுதல் போன்றவற்றை கற்றுக்கொண்டேன். ஹீரோயின் அதுல்யா ரவி வக்கீலாக நடித்துள்ளார். இடைவேளைக்குப் பிறகு கதை மாறும் திருப்பத்தை அவரின் கதாபாத்திரமே உருவாக்குகிறது. திபு நிபுணன் இசையமைத்துள்ள இப்படஸபாடல்கள் ஏற்கனவே பிரபலம். தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்களை பார்த்து ரசித்தேன். இந்த முறை என் படம் வருவது பெருமையாக உணர்கிறேன். ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ வெற்றிக்கு பின் டீசல் ஹாட்ரிக் வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். இப்போது பைப் லைன் நவீனமயமாகி பாதுகாப்பு அதிகரித்துள்ளதால் குரூடு ஆயில் திருட்டு சாத்தியமில்லை, இந்த கதையின் காலம் 2014ல் முடிகிறது என்றுள்ளார் ஹரிஷ் கல்யாண்.