மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள “டியூட்” திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். அவர் முன்னதாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. “டியூட்” திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இயக்குனர் கீர்த்தீஸ்வரன் படத்தைப் பற்றிப் பேசும்போது, “டியூட் படத்தின் கதையை எழுதத் தொடங்கியபோது, ரஜினிகாந்த் அவர்களுக்கு 30 வயது இருந்தால், இந்தக் கதையில் அவர் எப்படி நடித்திருப்பார் என நினைத்துக் கொண்டே எழுதினேன். அந்தக் கதாபாத்திரத்திற்கு பிரதீப் ரங்கநாதன் மிகச் சிறப்பாகப் பொருந்தினார். படத்தில் பிரதீப் மற்றும் மமிதா இருவரும் சேர்ந்து ஒரு ‘இவேன்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனத்தை நடத்துகிறார்கள். முழுப் படமும் சென்னையை மையமாகக் கொண்டது. இயக்குனராக எனது முதல் படமே தீபாவளிக்கு வெளியாகுவது எனக்கு ஒரு கனவு நனவானது போல உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, “மமிதாவிடம் இந்தப் படம் குறித்து பேசியபோது, அவரின் ‘பிரேமலு’ படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ‘சூப்பர் சரண்யா’ படத்தில் அவரின் நடிப்பை பார்த்து தான் அவரை தேர்ந்தெடுத்தோம். மமிதா கதையில் சேரும்போது, ரஜினி – ஸ்ரீதேவி இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என தோன்றியது; அதுபோல ஒரு ரசனை இந்தப் படத்திலும் உருவாகியுள்ளது,” என்றார்.இந்தப் படத்தில் பிரதீப் மற்றும் மமிதாவுடன் சேர்ந்து சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ புகழ் டேவிட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இவ்வாறு இயக்குனர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்தார்.