நர்மீன் என்ற குறும்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஜெய்தீப் அஹ்லாவத், பின்னர் பாலிவுட்டில் வெளியான ‘ஆக்ரோஷ்’ படத்தின் மூலம் ரசிகர்களும் விமர்சகர்களும் கவனிக்கத்தக்க நடிகராக மாறினார். இதைத் தொடர்ந்து ‘தி பேமிலி மேன் 3’ வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஜெய்தீப் பேசுகையில், சில நேரங்களில் நான் வாழ்க்கை என்னை எவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது என்று சிந்திப்பேன். என் கிராம வாழ்க்கை மிகவும் அழகானதும் எளிமையானதுமாக இருந்தது. ஆனால் அங்கிருந்து மும்பைக்கு வந்து வாழ்ந்த அனுபவம் முற்றிலும் மாறுபட்ட ஒன்று. மாட்டு சாணம் எடுப்பது முதல் ஆடம்பரமான ஹோட்டலில் வேலை பார்ப்பது வரை பல்வேறு அனுபவங்கள் எனது வாழ்க்கையில் இருந்துள்ளன.
இந்தப் பயணம் எனக்கு வாழ்க்கையைப் பற்றிய பல பாடங்களையும் குறிப்புகளையும் கற்றுக்கொடுத்தது. கிராமத்திலிருந்து ரோக்தக், பின்னர் பூனே, இப்போது மும்பை என பயணித்திருக்கிறேன். நான் பசுவின் வாலைப் பிடித்து நீச்சல் கற்றுக்கொண்டவன். உலகம் முழுவதும் சுற்றி பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வாழ்க்கை எனக்கு வழங்கியது. அந்தக் காலத்தில் எனது மிகப்பெரிய கனவு ஒரு வீடு வாங்குவதே. எங்களிடம் போதுமான பணம் இல்லாததால், ஒரு ஆண்டில் ஒரே ஜோடி ஷூ மட்டும் வாங்க முடிந்தது. இன்று நான் என் கனவு இல்லத்தை வாங்கியபோது, அடுத்தமுறை இதைவிட பெரியதைக் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. மனிதர்களின் இயல்பே அதுதான்- எதைக் கொண்டிருந்தாலும் அதில் திருப்தி அடையாமல் இன்னும் பெரியதை நாடுவோம்,” எனத் தெரிவித்துள்ளார் ஜெய்தீப் அஹ்லாவத்.தற்போது, இந்த ஆண்டில் ரூ.20 கோடி மதிப்பில் இரண்டு சொத்துகளை அவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.