மலையாளத் திரைப்படமான ‘ஒரு அடார் லவ்’ மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியா வாரியர், ஒரு கண் சிமிட்டிய சின்ன அசைவால் இந்திய அளவில் பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். மலையாளத் திரைப்படங்களோடு மட்டுமல்லாமல், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பிரியா வாரியர், திறமையான மோகினியாட்டக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம், “வருங்காலத்தில் எந்த நடிகை உங்களுக்கு போட்டியாக வருவார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பிரியா வாரியர் பதிலளித்தபோது, “எனக்கு எப்போதுமே அளவுக்கு மீறிய புகழ் பேசும் பில்டப்புகளும் தேவையற்ற கர்வங்களும் பிடிக்காது. எனவே நான் யாருடனும் போட்டியிடுவதே இல்லை. இந்தத் துறை திறமைசாலிகளுக்கானது; திறமை உள்ளவர்கள் அனைவரும் உயர முடியும். அதனால் இதில் ‘போட்டி’ என்ற சொல்லே தேவையில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடித்த ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ என்ற பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலில் பிரியா வாரியரின் நடனம் ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.