நடிகை காஜல் அகர்வால் கடைசியாக தமிழில் கமல் ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படத்தில் அவருடைய காட்சிகள் இடம்பெறாமல், மூன்றாவது பாகத்தின் முன்னோட்டக் காட்சிகளில் மட்டுமே தோன்றினார். தற்போது ‘இந்தியன் 3’ படத்தில் அவருக்கான காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், மீதமுள்ள சில காட்சிகளை எடுப்பது குறித்து இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல் ஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தினருக்கிடையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதால் அந்தப் படம் வெளியாகுமா என்பது சந்தேகமாகியுள்ளது. அதன் பின்னர் காஜல், ஹிந்தியில் ‘சிக்கந்தர்’ மற்றும் தெலுங்கில் ‘கண்ணப்பா’ போன்ற படங்களில் சிறிய தோற்றங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். தவெக் பிரசாரத்தின்போது கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “எல்லாரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன், அது வேறு துறை” என்று பதிலளித்தார். மேலும் நடிகர் விஜய் குறித்து அவர், “விஜய்யுடன் நான் பல படங்களில் இணைந்து நடித்துள்ளேன். அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் பெரிய ரசிகை” என்றும் கூறினார்.
தமிழில் அடுத்து எப்போது நடிப்பீர்கள் எனக் கேட்கப்பட்டபோது, “மிக விரைவில் தமிழ்ப் படத்தில் நடிப்பேன்” என தெரிவித்தார். பின்னர் கோலிவுட் மற்றும் பாலிவுட் துறைகளுக்கிடையேயான வித்தியாசம் பற்றி கேட்டபோது, “பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இரண்டும் மிகவும் படைப்பாற்றலுடனும் தொழில்முறையுடனும் இயங்கும் துறைகள். நான் தென்னிந்தியாவிலிருந்து என் திரை வாழ்க்கையைத் தொடங்கியதால் கோலிவுட் எனது மனதில் ஒரு சிறப்பான இடம் பெற்றுள்ளது” எனக் கூறினார். சமீபத்தில் அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற வதந்தி பரவியதைப் பற்றி கேட்கப்பட்டபோது, காஜல் அதனை மறுத்து, “அத்தகைய வதந்திகளுக்கு நான் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை” என்று தெளிவாக கூறினார்.