மும்பை காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ‛சைபர் விழிப்புணர்வு 2025’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அக்சய் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சில அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறியதாவது: எனது மகள் சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது உலகின் வேறு பகுதியில் இருந்த ஒருவர், அவளிடம் ‛நீ எங்கிருந்து விளையாடுகிறாய்?’ என்று கேட்டார். அதற்கு அவள் ‛நான் மும்பையில் இருக்கிறேன்’ என்று பதிலளித்தார். பின்னர் அவர் ‛நீ ஆணா அல்லது பெண்ணா?’ என்று கேட்டார். எனது மகள் ‛நான் பெண்’ என்று பதிலளித்ததும், அவர் ஆபாச பதிவுகளை அனுப்பி, பிறகு ‛உனது நிர்வாணப் படம் அனுப்பு’ என்று கூறினார். அதைக் கண்டதும் அதிர்ந்துபோன மகள் உடனே போனை அணைத்து அவள் அம்மாவிடம் தெரிவித்தார்” என்றார்.
சைபர் குற்றவாளிகளின் வலையில் குழந்தைகள் சிக்காமல் இருக்க வேண்டும் என்றும், சைபர் குற்றங்கள் சாதாரண குற்றங்களை விட ஆபத்தானவை என்றும் அவர் எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மேலும், பள்ளிகளில் 7வது வகுப்பு முதல் 10வது வகுப்பு வரை சைபர் பாதுகாப்பு குறித்த பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என மகாராஷ்டிர முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.